திண்டுக்கல் அருகே சாயப்பட்டறைகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


திண்டுக்கல் அருகே சாயப்பட்டறைகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x

திண்டுக்கல் அருகே சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை ஊராட்சி ராமநாதபுரம் கிராம மக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் கிராமத்தில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

சாயப்பட்டறைகளுக்கு தடை

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆத்தூர் தாலுகாவில் சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதில் சின்னாளப்பட்டி பகுதியில் சாயப்பட்டறை கழிவுகளால் மண்வளம் பாதிக்கப்பட்டு விட்டது. தற்போது வரை விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அம்பாத்துரை ஊராட்சி ராமநாதபுரத்தில் சாயப்பட்டறைகள் அமைக்க முயற்சி நடக்கிறது.

ராமநாதபுரம் கிராமத்தில் சாயப்பட்டறைகள் அமைந்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர், மண்வளம் கடுமையாக பாதிக்கப்படும். ஆழ்துளை கிணறுகள், கிணறுகள், குளங்கள், ஆறுகளில் கழிவுகள் கலந்து தண்ணீர் மாசுபட்டுவிடும். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாகிவிடும். அதோடு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே ராமநாதபுரம் கிராமத்தில் சாயப்பட்டறைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும், என்றனர்.

மண்எண்ணெயுடன் வந்த மூதாட்டி

இதற்கிடையே பழனியை அடுத்த பழைய ஆயக்குடி பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணு (வயது 60) என்பவர் மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தார். அதை பார்த்த போலீசார், மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையில் அவருடைய நிலத்தை உறவினர்கள் அபகரித்து கொண்டதால் விரக்தியில் தீக்குளிக்க மண்எண்ணெயுடன் வந்ததாக, போலீசாரிடம் அவர் கூறினார். இதனால் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி, மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

காமராஜர் சிலைக்கு அனுமதி

பாரத ரத்னா பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை தலைவர் ராமு.ராமசாமி (90) கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், சின்னாளப்பட்டி பஸ்நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 1983-ம்ஆண்டு அவருடைய சிலை நிறுவப்பட்டது. இதற்கிடையே 2005-ம் ஆண்டு கனமழை பெய்ததால் காமராஜர் சிலை சேதம் அடைந்தது. இதையடுத்து புதிதாக சிலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு முறையாக அனுமதி கிடைக்காததால் பீடம் அமைக்கப்பட்டு பணி பாதியில் நிற்கிறது. எனவே காமராஜர் சிலையை மீண்டும் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.


Next Story