ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டம்


ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 6:45 PM GMT)

சாயல்குடி அருகே ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் பொருட்கள்

சாயல்குடி அருகே காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காணிக்கூர் கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி தலைச்சுமையாகவும், மோட்டார்சைக்கிள்களிலும் கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதமாக இப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை எனவும், கைரேகை பதிவு மட்டும் பெற்று கொண்டு பொருட்கள் முறையாக வழங்காத விற்பனையாளர் மீது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று ரேஷன் கார்டுகளை சாலையில் தூக்கி வீசி அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் இருந்து காணிக்கூர் கிராமத்திற்கு கரடு முரடான சாலையில் நடந்து சென்று ேரஷன் பொருட்கள் வாங்கி வருகிறோம்.

சாலையில் வீசி போராட்டம்

ஆனால் முறையாக பொருட்கள் வழங்காமல் விற்பனையாளர் படிக்காத பெண்களிடம் கைரேகை மட்டும் வாங்கி சென்று விடுகிறார். கடந்த மாதம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் முழுவதுமாக வழங்கவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலையில் ரேஷன் கார்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.

பொருட்கள் கிடைக்காமல் ரேஷன் கார்டை வைத்து என்ன செய்வது. அதுமட்டுமின்றி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணிகளுக்கும் செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

உரிய நடவடிக்கை

இது குறித்து காணிக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி செல்ல பாண்டியன் கூறுகையில், ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்திற்கு நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மனு கொடுத்துள்ளோம்.

நடமாடும் ரேஷன்கடை வரும் வரை அந்த கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்குவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story