பஸ் வசதி கேட்டு கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் இருந்து பொட்டுவாச்சாவடி கிராமத்துக்கு பஸ் வசதி கேட்டு, கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பொட்டுவாச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் என 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொட்டுவாச்சாவடி கிராமத்தில் சுமார் 1,500 பேர் வசித்து வருகிறோம். எங்களது கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனம், அரசு பணிகளுக்கும், அன்றாடம் வேலைக்கு செல்ல 8 கிலோ மீட்டர் தூரமுள்ள தஞ்சைக்கு வர வேண்டி உள்ளது. ஆனால் பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களது கிராமத்துக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும். 20 ஆண்டுகளாக பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக எங்கள் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த மினிபஸ்சும் வரவில்லை. அதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள், கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.