பேரையூர் அருகே ரேஷன் கடை கேட்டு கிராமமக்கள் போராட்டம்
ரேஷன் கடை கேட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரையூர்,
ரேஷன் கடை கேட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ளது ஜாரி உசிலம்பட்டி. இந்த கிராமத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை ஜாரி உசிலம்பட்டி பெயரில் அருகிலுள்ள காவட்டு நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜாரி உசிலம்பட்டி மற்றும் இந்திரா காலனியில் உள்ள 110 குடும்ப அட்டைதாரர்கள் 4 கிலோ மீட்டர் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஜாரி உசிலம்பட்டியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை. இந்த நிலையில் அந்த பகுதி கிராமமக்கள் நேற்று காலை டி.கல்லுப்பட்டி-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கோபாலசாமி மலை விலக்கில் சாலையோரம் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் போலீசார், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில், இந்த மாதம் ஜாரி உசிலம்பட்டிக்கு வந்து ரேஷன் பொருட்கள் வழங்குவதாகவும், கடை கட்ட நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.