கள்ளிக்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்
கள்ளிக்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்
திருமங்கலம்,
கள்ளிக்குடி அருகே இலுப்பங்குளம், சுந்தரகுண்டு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து சுந்தரகுண்டு வழியாக அரசு பஸ் சென்று வருகிறது. கடந்த சில நாட்களாக சுந்தரகுண்டு கிராமத்திற்கு பஸ் செல்லாமல் இலுப்பங்குளத்திற்கு பஸ் சென்று வந்தது. இதனால் சுந்தரகுண்டு கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டனர். அரசு போக்குவரத்து அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று மாலை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வந்த அரசு டவுன் பஸ்சை காரியாபட்டி-கள்ளிக்குடி ரோட்டில் சுந்தரகுண்டு அருகே சிறை பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் போலீசார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.