கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிப்பு: சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 30 கிராம மக்கள் முற்றுகை


கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிப்பு:  சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 30 கிராம மக்கள் முற்றுகை
x

கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 கிராம மக்கள் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வல்லம்படுகை, கவரப்பட்டு, அம்பிகாபுரம், மேலதிருக்கழிப்பாலை, சின்ன காரைமேடு, பெரிய காரமேடு, வீரன் கோவில் திட்டு, படுகை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கொள்ளிடம் கரையையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அந்த பகுதியில் வாழக்கூடிய மக்கள் வெள்ள அபாயத்தில் வசிக்கிறார்கள். எனவே கொள்ளிடம் கரைபகுதியை அகலப்படுத்தி பலப்படுத்திட வேண்டும். மேலும் வல்லம்படுகை கொள்ளிடம் பாலத்தில் இருந்து கொடியம்பாளையம் வரை தடுப்பணை, கிராமத்துக்கு வெள்ளம் போகாமல் இருக்க கரையோர பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். வெள்ளப்பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.


இதற்கிடையே போராட்டம் பற்றி அறிந்த சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story