அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மறியல்
கறம்பக்குடி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலெக்டரிடம் பலமுறை மனு
கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி ஆத்தியடிப்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யவில்லை.
இதேபோல் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதை தவிர ஆத்தியடிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கடந்த 2020-21-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்கியும், இதுவரை சுற்றுச்சுவர் கட்டி தரப்படவில்லை. மேலும் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் சேதமடைந்த மின்மாற்றியை மாற்றி தரக்கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை மாற்றி தரவில்லை. ஆத்தியடிப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்லும் அரசு நகர பஸ் சரியாக இயக்கப்படுவதில்லை.
இந்த கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் இன்று காலை புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலை புதுப்பட்டி மூவர் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.