குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் திடீர் மறியல்


குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் திடீர் மறியல்
x

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராமமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கு காளியம்மன் கோவில் வீதியில் உள்ள 6 மற்றும் 7-வது வார்டுபகுதியில் கடந்த சில நாட்களாக புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு வந்தது. குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று காலை விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் ராஜேந்திரப்பட்டினம் பஸ் நிறுத்தத்தில் காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story