கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
சாத்தான்குளம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்கிணறு கிராமத்தில் தஞ்சைநகரம் செல்லும் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் மூலம் கூட்டுக்குடிநீர்திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனாலும் சீரமைத்து குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஆலங்கிணறு கிராமமக்கள் ஆலங்கிணறு விலக்கில் சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்து திரண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட மோட்டார் அறையில் பார்த்தபோது மின்மோட்டார் பழுதடைந்து இருப்பது தெரியவந்தது. உடன் ஊராட்சி சார்பில் அதனை சீரமைத்து குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து திரண்டு வந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.