ஓமலூர் அருகே மயானத்துக்கு பாதை கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்


ஓமலூர் அருகே  மயானத்துக்கு பாதை கேட்டு  கிராம மக்கள் உண்ணாவிரதம்
x

ஓமலூர் அருகே மயானத்துக்கு பாதை கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சாலை பணி உடனே தொடங்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

சேலம்

ஓமலூர்

மயானத்துக்கு பாதை

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி ஊராட்சி நைனாகாடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள மயானத்துக்கு பொது பாதையை பயன்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே அந்த பாதையை சிலர் ஆக்கிரமித்து கொண்டதுடன், மயானத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் அந்த பாதையை அளவீடு செய்து மயானத்துக்கு சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் மாணிக்கம், வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, மாவட்ட அமைப்பு தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி செல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, யூனியன் ஆணையாளர் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதை அமைக்கப்பட்டது

உடனே பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உடனே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்மூலம் நீண்ட காலம் இருந்த மயான பாதை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

1 More update

Next Story