வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார்கள் குலதெய்வ வழிபாடு


வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார்கள் குலதெய்வ வழிபாடு
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் நகரத்தார்கள் குலதெய்வ வழிபாடு நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் நகரத்தார்கள் குலதெய்வ வழிபாடு நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைத்தீஸ்வரன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சாமி கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமாரசுவாமி, சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாளிக்கின்றனர். இங்கு வழங்கப்படும் பிரசாதமான திருச்சந்தூர் உருண்டையை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமடையும் என கூறப்படுகிறது.

சீர்வரிசை பொருட்கள்

பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் தென் மாவட்டங்களை சேர்ந்த நகரத்தார்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு 2-வது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நகரத்தார்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தங்களது உடைமைகள் மற்றும் கோவிலுக்கு செலுத்த வேண்டிய சீர்வரிசை பொருட்களை பாரம்பரிய முறைப்படி இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட கூண்டு வண்டியில் அனுப்பினா். பின்னர் அதைதொடர்ந்து பாதயாத்திரையாக நேற்று முன்தினம் இரவு வைத்தீஸ்வரன் கோவில் எல்லையை வந்தடைந்தனர்.

சாமி தரிசனம்

அவர்களுக்கு நேற்று அதிகாலை கோவில் நிர்வாகம் சார்பில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் மேல கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் வந்து தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். முன்னதாக அவர்கள் தங்களது குலதெய்வமான தையல்நாயகி அம்பாளுக்கு சீர்வரிசையுடன், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

சிறப்பு பஸ்கள்

பின்னர் அவர்கள் பாதயாத்திரைக்கு துணையாக கொண்டு வந்த வேப்பங்குச்சிகளை வைத்தியநாத சாமி சன்னதி அருகில் உள்ள கொடிமரத்தில் காணிக்கையாக வைத்து விட்டு அங்கிருந்து வேறு ஒரு குச்சியை வழிபாட்டுக்கு தங்கள் கையில் எடுத்து சென்றனர். விழாவையொட்டி தென் மாவட்ட பக்தர்கள் தங்கள் யாத்திரையை முடித்துவிட்டு ஊர் திரும்ப வசதியாக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் 4 வீதிகளிலும் பேரூராட்சி பணியாளர்கள் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திருந்தனர். நகரத்தார் திருவிழாவை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story