விழுப்புரம் பொன்அண்ணாமலைநகர் எல்லை பிடாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


விழுப்புரம் பொன்அண்ணாமலைநகர் எல்லை பிடாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 19 July 2023 6:45 PM GMT)

விழுப்புரம் பொன் அண்ணாமலை நகர் எல்லை பிடாரியம்மன் கோவிலில் நடந்த ஆடித்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் பொன் அண்ணாமலை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்லை பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் 24-ம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 17-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து எல்லை பிடாரியம்மனுக்கு பக்தர்கள் கையால் பாலாபிஷேக ஆராதனை நடந்தது. அதன் பிறகு பகல் 12 மணிக்கு சக்தி பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1 மணிக்கு விமான ஊஞ்சல் சேவையும், 1.30 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 4.30 மணிக்கு பொங்கல் வைத்தும் வழிபட்டனர். தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு பக்தர்கள் வேண்டுதலின்பேரில் அம்மன் வேடம் அணிந்து அக்னி சட்டி எடுத்தலும், கற்பூர அபிஷேகமும் நடந்தது.

கும்பம் படைத்தல்

பின்னர் இரவு 8 மணிக்கு கும்பம் படைத்தல் நடைபெற்றது. அப்போது எல்லை பிடாரியம்மனுக்கு அனைத்து சைவ, அசைவ வகை உணவுகளும் படையலிடப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கும்ப படையலில் இருந்த உணவு, பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொன் அண்ணாமலை நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story