விழுப்புரம்- புதுச்சேரி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது


விழுப்புரம்- புதுச்சேரி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது
x

2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்- புதுச்சேரி இடையேயான பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

விழுப்புரம்

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு ஏற்கனவே தினமும் அதிகாலை 5.25 மணிக்கும், மதியம் 2.25 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாலை 5.25 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் புறப்பட்டுச்செல்லும் பயணிகள் ரெயிலை மட்டும் இயக்க தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

ரெயில் சேவை தொடங்கியது

அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்- புதுச்சேரி இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட்ட ரெயில் 6.25 மணிக்கு புதுச்சேரியை சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ரெயில் 9.05 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தது.

இதேபோல் விழுப்புரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரெயில் 6.45 மணிக்கு புதுச்சேரி சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்ட ரெயில் 8 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தது.

பயணிகள் மகிழ்ச்சி

ஏற்கனவே இம்மார்க்கத்தில் தினசரி சென்னை- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், சென்னை- புதுச்சேரி பயணிகள் ரெயிலும், திருப்பதி- புதுச்சேரி பயணிகள் ரெயிலும் மற்றும் வாராந்திர ரெயில்களான தாதர்- புதுச்சேரி, ஹவுரா- புதுச்சேரி, புவனேஸ்வர்- புதுச்சேரி, கன்னியாகுமரி- புதுச்சேரி, டெல்லி- புதுச்சேரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது விழுப்புரம்- புதுச்சேரி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story