விழுப்புரம்: கைவினை பொருட்கள் கடையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்துருந்த 7 உலோக சிலைகள் மீட்பு


விழுப்புரம்: கைவினை பொருட்கள் கடையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்துருந்த 7 உலோக சிலைகள் மீட்பு
x

கைவினை பொருட்கள் கடையில் 7 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கன்னிகா கார்டனில் அமைந்துள்ள ஒரு கைவினை பொருட்கள் விற்பனை கடையில் பழம்பெரும் சாமி உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மாஜிஸ்திரேட்டிடம் முறையான அனுமதி பெற்று இந்த கடையில், டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன், இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் சோதனையிட்டனர்.

இதில் 116 செ.மீ. உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர், 60 செ.மீ. உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர், இடது மணிக்கட்டு உடைந்த நிலையில் அர்த்தநாரீஸ்வரர், 126 செ.மீ. உயரமுள்ள சிவகாமி தேவி, 122 செ.மீ. உயரமுள்ள கிருஷ்ணர், 22 செ.மீ. உயரம் கொண்ட புத்தர், 34 செ.மீ. உயரம் உடைய முள்ளு மயில் வாகனம் ஆகிய 7 வெண்கல உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அந்த சிலைகளை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் டி.ஆர்.ராமச்சந்திரனிடம் எந்த கோவிலில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story