விநாயகர் சிலை உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வைக்கப்படும் சிலைகளின் உயரம் அதிகபட்சம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை அமைப்பது மற்றும் விசர்ஜன ஊர்வலம் மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா விஜயன், போலீஸ் துணை கமிஷனர் வனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
10 அடி உயர சிலை
கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, விநாயகர் சிலை அமைப்பதற்கு மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் உதவி கமிஷனரிடமும், ஊரக பகுதிகளில் தொடர்புடைய ஆர்.டி.ஓ.க்களிடமும் உரிய அனுமதி பெற்று சிலைகளை அமைக்க வேண்டும். மாசு ஏற்படுத்தாத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையில் ரசாயன வண்ணப்பூச்சு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உயரம், பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சமாக 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.
அமைப்பாளர் பொறுப்பு
ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் வெடிக்கக்கூடாது. பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் கோஷமிடக்கூடாது. போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாமல் ஊர்வலம் நடக்க வேண்டும். பிரதான சாலைகளில் சாலையின் இடதுபுறமாக ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தை அமைதியாக நடத்த முழுப்பொறுப்பையும் அமைப்பின் பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஊர்வலத்தின்போது போக்குவரத்துக்கோ, பொது சொத்துக்கோ சேதம் விளைவித்தால் அமைப்பாளர்கள் தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் பேசும்போது, 'விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். கட்சியினர் சாலையோரம் விளம்பர பலகைகள் வைக்கிறார்கள். நாங்கள் விளம்பர பலகை அமைக்க கெடுபிடி காட்டுகிறீர்கள். விளம்பர பலகை வைப்பதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடமுறையை கடைபிடிக்க வேண்டும்' என்றார்.