விநாயகர் சிலை அமைப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
விநாயகர் சிலை அமைப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகரில் இந்து மக்கள் கட்சி செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் முயற்சியால் இன்று வீடுகள் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நமது நாட்டின் தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது. 'ஜி20' நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை பொறுப்பேற்கும் அளவுக்கு நாடு முன்னேறி உள்ளது. அண்டை நாடுகளில் பொருளாதார சீர்கேடு, தேசமே திவாலாகிப் போன நிலை உள்ளது.
இந்தியா வளர்ச்சி பெற்ற நாடு
இலங்கையில் பொருளாதார பின்னடைவு, பர்மாவில் ராணுவ ஆட்சி என நமது காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளின் நிலை மோசமாக உள்ளது.
ஆனால் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியா இன்று பொருளாதாரத்தில் மேலோங்கி, உலக நாடுகளில் வளர்ச்சி பெற்ற நாடாக உள்ளது.கொேரானா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்கும் அளவுக்கு நமது நாட்டின் வளர்ச்சி உள்ளது
அரசு பேச்சுவார்த்தை
விநாயகர் சதுர்த்திக்கு திருப்பூர்,கோவை மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
விநாயகர் சிலை அமைப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி வருகிறார். மணிப்பூருக்கு நேரில் சென்ற அவர், நான்குநேரிக்கு செல்லாதது ஏன்? தி.மு.க. ஆட்சியைப்பயன்படுத்தி, கட்டப்பஞ்சாயத்து கட்டாய வசூல் என ரவுடித்தனத்தை இவர் ஊக்குவித்து வருகிறார்.
பொதுசிவில் சட்டம்
சாதி கலவரத்தை மையப்படுத்தி அமைந்த நான்குநேரி சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே இச்சம்பவத்துக்கு காரணம். சிலர் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா படம் எடுக்கின்றனர்.
சமூகநீதி, இட ஒதுக்கீடு கொள்கைகள் மாறினால்தான் சாதி கலவரங்கள் நீங்கும். இதற்கு பொது சிவில் சட்டம் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.