விதிமுறைகளை மீறினால் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனங்களின் உரிமம் ரத்து, அபராதம் விதிக்கப்படும்.
விதிமுறைகளை மீறினால் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அரியலூர் நகராட்சி கூட்ட அரங்கில் தனியார் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மனித கழிவுகளை மனிதனே அகற்றக்கூடாது. நச்சு தொட்டியில் இறங்கி தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடாது. பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரியலூர் நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் திருச்சி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீர் உந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் செங்குந்தபுரத்தில் உள்ள எப்.எஸ்.டி.பி.யில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும். நகராட்சியில் பதிவு செய்த கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் விதிமீறலில் ஈடுப்பட்டால் முதல் குற்றத்திற்காக ரூ.25 ஆயிரமும், 2-வது குற்றத்திற்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறினால் அந்த வாகனங்கள் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுவதுடன், வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.