வாகன எண் பலகையில் விதிமீறல்: வாகன நிறுத்தும் இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி ஆய்வு


வாகன எண் பலகையில் விதிமீறல்: வாகன நிறுத்தும் இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி ஆய்வு
x

சென்னையில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் போக்குவரத்து போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். இதில் முறையற்ற வாகன எண் பலகை இடம் பெற்றிருந்த வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன எண் பலகைகள் (நம்பர் பிளேட்) இருக்க வேண்டும். வாகன எண் பலகைகளில் விதவிதமான வடிவங்களில் எண்கள் எழுதக்கூடாது. பெயர் பலகைகளில் வாசகங்களோ, படங்களோ இடம் பெறக்கூடாது. ஆனால் வாகன ஓட்டிகள் பலர் இந்த உத்தரவை கடைபிடிக்காமல் இருந்து வருகின்றனர். வாகன எண் பலகைகளில் அரசியல், சினிமா பிரமுகர்கள் படங்களை ஒட்டி உள்ளனர். காதல் வாசகங்கள், கவிதைகளை எழுதி உள்ளனர்.இதுபோன்ற வாகனங்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும்போது வாகன எண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனையின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களை மடக்கிப்பிடித்து போக்குவரத்து போலீசார் அபராத நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சோதனையில் வாகன ஓட்டிகள் பலர் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் பஸ்-ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை உள்பட பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் வாகன சட்ட நடைமுறையை பின்பற்றாமல் வாகன எண் பலகை இடம் பெற்றிருந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த வாகனத்தின் எண்கள் அடிப்படையில் 'இ-சலான்' மூலம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவல் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனடியாக குறுந்தகவல் வாயிலாக சென்றடைந்தது.

மேலும் அபராதம் விதித்தது தொடர்பான நோட்டீசை அந்த வாகனத்தில் போக்குவரத்து போலீசார் ஒட்டிச்சென்றனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடத்தில் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் கூறியதாவது:-

வாகனங்களில் முன் மற்றும் பின்புற பகுதியில் குறைப்பாடு உள்ள வாகன எண் தகடு பொருத்தப்பட்ட வாகன எண் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு இந்த தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாகன ஓட்டிகள் இந்த விதிமீறல்களுக்கான ரூ.500 அபராத தொகை செலுத்திய விவரம், வாகன எண் பலகையை சரி செய்த புகைப்படம் ஆகியவற்றை குறிப்பிட்ட போலீஸ் நிலைய 'இ-மெயில்' முகவரி அல்லது வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரியின் 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதனை கடைபிடிக்க தவறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாகன நிறுத்தும் இடங்களில் இதுபோன்ற திடீர் சோதனை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இதேபோல் செம்பியம் போக்குவரத்து போலீசார் பெரம்பூர் ெரயில் நிலையம், அதன் எதிரே உள்ள ஓட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், பெரம்பூர் கேரேஜ் மற்றும் லோகோ ெரயில் நிலைய வாகன நிறுத்தும் இடங்களில் இருந்த மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்தனர்.

அதில் முறையாக வாகன எண் பலகை இல்லாத மொத்தம் 118 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலை மணி தெரிவித்தார்.


Next Story