சாலை விதி மீறுபவர்களை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம்


சாலை விதி மீறுபவர்களை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம்
x
தினத்தந்தி 12 Aug 2023 7:15 PM GMT (Updated: 12 Aug 2023 7:15 PM GMT)

மயிலாடுதுறையில் சாலை விதி மீறுபவர்களை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் முறை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் அமலாகிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சாலை விதி மீறுபவர்களை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் முறை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் அமலாகிறது.

காவல் கட்டுப்பாட்டு அறை

மயிலாடுதுறை போலீஸ் நிலைய வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் போக்குவரத்து சிக்னல் தொடக்க விழா நடந்தது.

விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கி, புதிய ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகள், வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள், முக்கிய இணைப்புச் சாலைகளில் முதல் கட்டமாக 110 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

அபராதம்

இந்த அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 'ஹெல்மெட்' அணியாமல் செல்பவர்கள், செல்போன் பேசியபடி செல்பவர்கள் என சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணித்து வாகனங்களின் பதிவு எண் மூலம் வாகன உரிமையாளர்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும்.

மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுதல், விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.

போக்குவரத்து சிக்னல்

மயிலாடுதுறை நகரில் முக்கிய சந்திப்புகளான கண்ணாரத் தெரு, கிட்டப்பா அங்காடி, கால்டெக்ஸ், அருணா பெட்ரோல் பங்க், சப் ஜெயில், அரசு ஆஸ்பத்திரி சாலை ஆகிய 6 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளது.

இதில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படும். இவை அனைத்தும் வருகிற 15-ந் ேததி (செவ்வாய்க்கிழமை) அமலாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தனியார் நிறுவன தொழில் நுட்ப இன்ஸ்பெக்டர் ராம்பிரசாத், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் மற்றும் அதனை இயக்கும் விதம் குறித்து விளக்கி பேசினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் நன்றி கூறினார்.


Next Story