"கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம்" தமிழகத்தில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி
பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம்,கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
சீராய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக பொறுப்பேற்ற பிறகு, மாதந்தோறும் இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் தலைமையில் 15வது சீராய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. ரூ.3200 கோடி மதிப்பிலான பணிகள் இந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில், இவ்வளவு பணிகள் மேற்கொண்டது முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தான்.
இன்றைய கூட்டத்தில், கூடுதலாக மருத்துவமனைகள் அமைத்தல் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒரு வேளை அன்னதானம் குறித்தும் பேசப்பட்டது. சபரிமலை யாத்திரைக்காக 24 மணி நேர தகவல் மையம் அமைத்து, சபரிமலையிலே அரசு அதிகாரிகளை இந்து சமய அறநிலைத்துறை நியமிப்பது குறித்தும், தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையிலான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆட்சியில் ரூ.254 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வந்த பிறகு 300க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. 1000 ஆண்டு கால பழமை வாய்ந்த கோயில்களுக்காக நிதி ஒதுக்கி, அந்த கோயில்களை புணரமைப்பு செய்வதற்கு, இந்த ஆண்டு டெண்டர் விடுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 87,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். அதிகாரிகள் உறங்குவது ஐந்து மணி நேரம் மட்டும் தான். மீதமுள்ள 19 மணி நேரத்தில் எப்போதும் அழைத்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள், பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை, இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலமோ அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும், அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம். இந்து சமய அறநிலையத் துறைக்கு, காசித் தமிழ்ச் சங்கம நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை. வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம் கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விஐபி தரிசனம் இந்த ஆட்சியில் உருவானது அல்ல. நாளடைவில் விஐபி தரிசனம் முடக்கப்படும். திருக்கோவிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.
பாஜக ஒரு சைத்தான். சைத்தான்களுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.