வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்


வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
x

வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்தி தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்

புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது. உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது. இதனால்தான் வீடுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கு பீதி ஏற்படுகிறது.

காய்ச்சல் ஒரு சுவாச தொற்று நோய். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் 'இன்புளூயன்ஸா' என்ற வகை வைரசால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல் குறிப்பாக இரவில் அதிகரிக்கும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட வரலாம் என்கின்றனர். சென்னையை பொறுத்தவரையில் கடந்த 60 நாட்களாக வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது. இது பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நிலைகளையும் இந்த வகை காய்ச்சல் மோசமாக்கிவிடுவதால் பொதுமக்களால் அஞ்சப்படுகிறது. பொதுவாக, உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி பாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்சினையில்லை. அதை தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமாக காய்ச்சல் காலம் செப்டம்பரில் தொடங்கி நவம்பரில் உச்சத்தை எட்டும். டிசம்பர்-ஜனவரிக்கு பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக குறையும். ஆனால் இந்த ஆண்டு காய்ச்சல் சீசன் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து தொற்று பரவுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், எச்1என்1 பாதிப்பு காணப்பட்டது. வாரங்கள் பல கடந்த நிலையில், எச்3என்2 மற்றும் 'இன்புளூயன்சா' பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காண முடிகிறது. இப்போது, ரைனோவைரஸ் மற்றும் ஆர்.எஸ்.வி. (சுவாச ஒத்திசைவு வைரஸ்) போன்ற வைரஸ்களின் கலவையும் பரவுகிறது. இதனால் சராசரியாக தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நோயாளிகளையும், அவசரநிலையில் 10 நோயாளிகளும் வருகின்றனர்' என்று தொற்று நோய்கள் ஆலோசகர்களும் கூறுகின்றனர்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.

கவனமாக இருக்க வேண்டும்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-

'எச்3 என்2' வகை வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய வைரஸ் வேகமாக பரவக்கூடியது. அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு 3 வாரங்களுக்கு காய்ச்சல் உடல் வலி மற்றும் இருமல் பாதிப்பு இருக்கும். வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுவது மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.

அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பரிசோதனை

நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஷியாம் சுந்தர்:-

தற்போது குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் உடல் வலி, தொண்டை வலி மற்றும் இருமலால் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அடிக்கடி அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்துவிட்டு சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். சத்தான உணவு வகைகள் மற்றும் தின்பண்டங்களை வீட்டில் சமைத்து குழந்தைகளுக்கு தர வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டு வைத்திய முறை எதையும் கையாளக் கூடாது. டாக்டரை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவிர்க்காமல் கொடுக்க வேண்டும். பின்னர் 3 அல்லது 5 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும்.

விழிப்புணர்வு

திருச்செங்கோட்டை சேர்ந்த இல்லத்தரசி ராணி செல்வகுமார்:-

தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர். அதனால் இத்தகைய வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதோடு வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள எத்தகைய உணவு முறைகளை கையாள வேண்டும் என்பதை விளக்க வேண்டும். அப்போதுதான் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

கட்டாயம் முகக்கவசம்

மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை:-

கை கழுவும் இடங்கள், கழிவறைகள் மற்றும் வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு அதனைப்பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்து உள்ளோம். சளி, இரும்பல் போன்ற அறிகுறிகள் மாணவர்களுக்கு இருப்பது கண்டறியபட்டால் உடனடியாக வட்டார சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் டாக்டரிடம் மாணவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லுமாறு பெற்றோருக்கும் அறிவுறுத்துகிறோம். அதோடு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு கொடுத்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரோக்கியமான உணவு

வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னேற்ற பேரவை தலைவர் ஜி.பி.சாமி:-

ஆங்காங்கே தேங்கி இருக்கும் கழிவு நீர் மற்றும் குப்பைகளால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொசு தொல்லை இல்லாமல் இருக்க நிர்வாகத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மாணவ, மாணவிகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சுகாதாரத்தை பள்ளி, கல்லூரிகளில் கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மேலும் மாணவ, மாணவிகள் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 பேர் பலி

நாடு முழுவதும் 'எச்3 என்2' வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலுக்கு அரியானாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி உள்ளது.

இதற்கிடையே வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


Next Story