போதை நபர்களை பிடிக்க, புதிய நடைமுறையை வெளியிட்ட போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர்


போதை நபர்களை பிடிக்க, புதிய நடைமுறையை வெளியிட்ட போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர்
x

போலீசார் நடத்திய சோதனையில் குடிப்பழக்கம் இல்லாத நபரை குடிகாரனாக காட்டிய ‘பிரெத் அனலைசர்’ கருவி பழுதான கருவி என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் தெரிவித்தார். மேலும் அவர் குடிகாரர்களை பிடிக்க புதிய நடைமுறைகளையும் அறிவித்தார்.

சென்னை

குடிகாரனாக காட்டிய கருவி

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை அருகே கடந்த 27-ந் தேதி அன்று தேனாம்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீசார் வாகன சோதனை நடத்தி போதை ஆசாமிகளை மடக்கிப்பிடித்து வழக்கு போட்டனர். அப்போது அங்கு காரில் வந்த தீபக் என்ற இளைஞரை மடக்கி 'பிரெத் அனலைசர்' சுவாச கருவி மூலம், அவர் போதையில் இருக்கிராரா, என்று சோதனை போட்டனர். சோதனையில் அவரது ரத்தத்தில் 45 சதவீதம் மது இருப்பதாக கருவி காட்டியது.

இதனால் தீபக் அதிர்ச்சி அடைந்தார். அவர் போதைப்பழக்கம் இல்லாதவர். குறிப்பிட்ட சுவாச கருவி சரி இல்லை என்றும், நான் குடிப்பழக்கம் இல்லாதவன் என்றும் தீபக் போலீசாரிடம் வாதிட்டார். இது சம்பந்தமான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் போதை ஆசாமிகளை பிடிக்க பயன்படும் 'பிரெத் அனலைசர்' எனப்படும் சுவாச கருவிகளின் செயல்பாட்டில் பெரிய சந்தேகத்தை எழுப்பியது.

பழுதான கருவி

இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், நேற்று அளித்த பேட்டியில், குறிப்பிட்ட பிரெத் அனலைசர் கருவி தொழில் நுட்ப கோளாரால் பாதிக்கப்பட்டது, என்றும் இதனால் மற்ற எல்லா பிரெத் அனலைசர் கருவிகளும் சரி இல்லை என்று கூற முடியாது, என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

இது போல் பிரெத்அனலைசர் கருவியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவது மிகவும் அரிதானது. இது குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. குறிப்பிட்ட கருவியை அப்புறப்படுத்தி விட்டோம்.

புதிய நடைமுறை

இனிவரும் காலங்களில் போலீசார் போதை நபர்களை சோதிக்கும் போது, மது அருந்தவில்லை என்று யாராவது ஆட்சேபம் தெரிவித்தால், அவரிடம் 2 முறை பிரெத் அனலைசர் கருவி மூலம் சோதனை நடத்தப்படும். அதிலும் குறிப்பிட்ட நபர் திருப்தி அடையவில்லை என்றால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று அந்த நபருக்கு ரத்த பரிசோதனை நடத்தி மது அருந்தி உள்ளாரா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும். 100 மில்லி கிராம் ரத்தத்தில் 30 மில்லி கிராமும், அதற்கு மேலும் மது அளவு இருந்தால் மட்டுமே போதை நபர் என்று கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும். தினமும் சுமார் 10 ஆயிரம் வாகன ஓட்டிகளிடம் மது அருந்தி உள்ளார்களா, என்று சோதனை நடத்தப்ப டுகிறது. கடந்த 15 மாதங்களில் 37 ஆயிரம் போதை நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போதை நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், விபத்தால் உயிரிழப்பு கடந்த ஆண்டு 13 சதவீதம் குறைந்துள்ளது.

புகார் கொடுக்கலாம்

சோதனைக்கு பயன்படுத்தும் முன்பு பிரெத்அனலைசர் கருவியை தினமும் 3 முறை சோதித்து பார்த்துக்கொள்ள போலீசாருக்கு அறிவுறை வழங்கப்பட்டுள்ளது. ஒரு கருவியின் தவறை வைத்து ஒட்டு மொத்த பிரெத்அனலைசர் கருவிகள் மீதும் சந்தேகம் கொள்ள கூடாது. பொதுமக்கள் போலீசாருக்கு இந்த விசயத்தில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.தவறு செய்யும் போலீசார் மீது புகார் கொடுக்கலாம். அந்த புகார்கள் மீது பாரபட்சம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேட்டியில் தெரிவித்தார். அப்போது போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மயில்வாகனன் உடன் இருந்தார்.


Next Story