ெபாதுத்தேர்வில் கெத்து காட்டும் விருதுநகர் மாவட்டம்


ெபாதுத்தேர்வில் கெத்து காட்டும் விருதுநகர் மாவட்டம் சாதனை குறித்து கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

கல்விக்கண் திறந்த காமராஜர், பிறந்த ஊர் என்பதால் விருதுநகருக்கும், கல்விக்கும் நெருக்கம் அதிகம்.

பல ஆண்டுகளாக பொதுத்தேர்வுகளில் முன்வரிசையில் இடம் பிடித்து கெத்து காட்டிவரும் மாவட்டம் என்றால், அது விருதுநகர்தான்.

இடையில் அவ்வப்போது சிறுசிறு சறுக்கல்கள் வந்தாலும், தேர்ச்சியில் எங்கள் மாவட்டம்தான் நம்பர்-1 என இந்த ஆண்டும் அந்த மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் நிரூபித்து உள்ளனர்.

இந்த பலன் கிடைக்க மாணவர்களின் உழைப்பு மட்டுமின்றி, ஆசிரியரியர்களின் அர்ப்பணிப்பு, கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள், திட்டமிடல் ஆகியவையும் எந்திரங்களாக பின்னால், இருந்து இயக்கியதும் முக்கிய காரணங்கள்.

இதனால் முதல் இடம் என்ற கோப்பையை அந்த மாவட்டம் இம்முைறயும் உச்சிமுகர்ந்து இருக்கிறது.

இந்த சாதனை குறித்து அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஆசிரியை

சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை நுத்ரா:-

விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறது. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களும் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறார்கள். ஆசிரியர்கள் நல்ல முறையில் காலை, மாலை பயிற்சி கொடுத்தனர்.

பின்தங்கிய பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்களும் அதிக விழுக்காட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசு பள்ளிகளுக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி கொண்டிருப்பதால் எங்களை போன்ற ஆசிரியர்களுக்கு இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. பின்தங்கிய மாணவர்கள் நலன் காக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.

தலைமை ஆசிரியர்

பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன்:-

பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடரும்.

கிராமப்புற மாணவர்களின் கல்விதிறன் அதிகரிக்க கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொண்டனர். விடுமுறை நாட்களில் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களின் தேர்ச்சிக்கு கடுமையாக உழைத்துள்ளனர். பல கிராமப்புற பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை பிளஸ்-2 தேர்வில் பெற்றுள்ளது. ஆசிரியர்களின் இடைவிடாத பயிற்சி காரணமாக பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவர்களின் சாதனைக்கு அரசின் திட்டங்கள் பெரும் உதவியாக உள்ளன.

தலைமை ஆசிரியை

சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி:-

பிளஸ்-2 தேர்வில் எங்களது பள்ளி 93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

மேலும் அரசின் பல்வேறு திட்டங்கள் அரசு பள்ளியை நோக்கி மாணவர்களை வர செய்தது. அரசு பள்ளி மாணவர்களும் நல்ல தேர்ச்சி பெற்றதால் தான் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற முடிந்தது.

மாணவிகள்

மண்குண்டாம்பட்டியை சேர்ந்த மாணவி மனிஷாலட்சுமி:-

விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்கு அனைத்து மாணவர்களின் கடின உழைப்பு தான் காரணம்.

ஆசிரியா்கள், பெற்றோர் கொடுத்த முழு ஊக்கமே எங்களது வெற்றிக்கு அடித்தளம் ஆகும். இன்னும் சில நாட்களில் கல்லூரிக்கு செல்ல இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

காரியாபட்டியை சேர்ந்த மாணவி அம்பிகா:-

காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். நாங்கள் படிப்பதற்கு எங்களுடைய ஆசிரியர்கள் மிகுந்த ஊக்கத்தை அளித்தனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் எங்களை போன்ற மாணவிகளை படிக்க வைக்க பெரிதும் பாடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வந்தததால் தான் அரசு பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது.

மாணவர்கள்

காரியாபட்டியை சேர்ந்த மாணவர் வருசராஜா:-

காரியாபட்டி பகுதி முழுவதும் மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்களின் விடாமுயற்சிதான் இந்த வெற்றிக்கு காரணம்..

அம்மாபட்டியை சேர்ந்த மாணவர் மாரி செல்வம்:-

நான் அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றேன்.. மாணவர்களுக்கு அடிக்கடி தேர்வு நடத்துவது, பள்ளிக்கு தொடர்ந்து வர வைப்பது ஆகிய ஆசிரியர்களின் அணுகுமுறையே மாவட்டம் முதலிடம் வந்ததற்கு காரணமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


2 முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து

விருதுநகர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி தற்போது இடமாறுதலாகி சென்ற ஞான கவுரி கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் மீண்டும் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் வர வேண்டும் என வலியுறுத்தினேன். ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் கடுமையாக உழைத்தனர். ஆதலால் தான் தற்போது பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற முடிந்தது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சில மாணவர்கள் பின்தங்கி இருந்தாலும் அவர்களை சிறப்பு பயிற்சியளித்து தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படும் இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்தோம். பின்னர் பள்ளி கல்வித்துறையே அனைத்து இடங்களிலும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து உதவி செய்தது. மாவட்ட பள்ளி கல்வித்துறையானது, ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் அவர்களிடம் கனிவுடன் பேசி இந்த சாதனையை பெற உதவுமாறு கேட்டுக் கொண்டோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அந்த வகையில் மாவட்டம் முதலிடம் பெற்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உதவி செய்த பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் கல்வியில் சாதனை படைக்கும் என்பது மட்டும் உறுதி. அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்ட ராமர் கூறியதாவது:-

இன்று (அதாவது நேற்று) மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த சிறப்புமிகு தகவல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இச்சாதனையை பெறுவதற்காக மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கடுமையாக உழைத்தது பாராட்ட தகுந்தது. தொடர்ந்து மாவட்டம் சிறப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ள மாவட்டத்திலுள்ள கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட பள்ளி கல்வித்துறை மேற்கொள்ளும்.



Next Story