விருதுநகர்: விஜயகரிசல்குளம் அகழாய்வில் வீட்டின் திண்ணை பகுதி கண்டுபிடிப்பு...!
விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் வீட்டின் திண்ணை பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் இதுவரை 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 15ஆவது அகழாய்வு குழியில் நான்கடி ஆழம் தோண்டப்பட்டபோது பெண்கள் காலில் அணியக்கூடிய சங்கினால் செய்யப்பட்ட அணிகலன், மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட விலங்கின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் 10 அடி ஆழம் தோண்டப்பட்ட போது ஒரே இடத்தில் உடையாத நிலையில் சுடு மண் பானைகள் ஆறு உள்ளன. இதனை பார்க்கும்போது பண்டைய காலத்தில் மண்பாண்ட தொழிற்கூடம் இயங்கி இருக்கலாம் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறினார்.
இந்த அகழாய்வு குழியில் மறுபகுதியில் பண்டைய காலத்தில் வீட்டின் முன்புறம் அமைக்கப்படும் திண்ணை போன்று பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உட்கார வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதனால் இக்குழியினை மேலும் அகலப்படுத்தினால் வீட்டின் முழு பகுதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும். இதன் மூலம் அகழாய்வின் முக்கிய கட்டத்தை நெருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.