விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கைது


விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கைது
x

வேலை வாங்கித்தருவதாக பண மோசடி வழக்கில் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

வேலை வாங்கித்தருவதாக பண மோசடி வழக்கில் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில்வேயில் வேலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் சிவகாசி மாநகர பா.ஜனதா துணைத்தலைவராக உள்ளார். இவர் தனது மகன்கள் கார்த்திக், முருகதாஸ் ஆகியோரை மத்திய அரசு பணியில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனை விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரிடம் கூறியதாக தெரிகிறது. அவர் கப்பல்துறை, ரெயில்வேத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல தவணைகளில் ரூ.11 லட்சம் பெற்றதாகவும், இதற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பண மோசடி

இந்தநிலையில் தனது மகன்களுக்கு மத்திய அரசு வேலை வாங்கித்தராத சுரேஷ்குமாரிடம், தான் கொடுத்த பணத்தை பாண்டியன் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாண்டியன், சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் பா.ஜனதா மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கலையரசனை ேபாலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமறைவாக இருந்தார். பின்னர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

பா.ஜனதா மாவட்ட தலைவர் கைது

இதற்கிடையில் நேற்று காலை வீட்டில் இருந்த அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

முன்ஜாமீன் பெற்ற பா.ஜனதா மாவட்ட தலைவரை திடீரென போலீசார் கைது செய்தது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை சுரேஷ்குமார் சரியாக பின்பற்றவில்லை என்றும், அதனால் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Related Tags :
Next Story