விஷ்ணு துர்க்கை கோவில் குடமுழுக்கு
திருக்கடையூர் அருகே விஷ்ணு துர்க்கை கோவில் குடமுழுக்கு
திருக்கடையூர்:
காலமநல்லூர் ஊராட்சியில் உள்ள குமாரக்குடி தெற்குத்தெரு கிராமத்தில் விஷ்ணு துர்க்கை கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து வந்தது. தற்போது திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நேற்று 2-ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை வந்தடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குமாரக்குடி கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.