முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ந் தேதி வருகை
நாகர்கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6-ந் தேதி வருகிறார். தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு நினைவு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6-ந் தேதி வருகிறார். தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு நினைவு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
ஆலோசனை கூட்டம்
நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு நினைவு மாநாடு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த மாநாடு குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார்.
முதல்-அமைச்சர் வருகை
அதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் தோள் சீலை போராட்ட மாநாடு வருகிற 6-ந் தேதி நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். மேலும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்தரசன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் 7-ந் தேதி காலை மாநகராட்சி கட்டிடத்தையும், ஒழுகினசேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு
அதைத் தொடர்ந்து நாகராஜா கோவில் திடலில் தோள் சீலை மாநாடு நடக்கும் இடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.