பட்டாசு வெடி விபத்து நடந்த பகுதியில் அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டனர்


பட்டாசு வெடி விபத்து நடந்த பகுதியில் அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டனர்
x

மோகனூர் அருகே பட்டாசு வெடி விபத்து நடந்த பகுதியை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டனர்.

நாமக்கல்

மோகனூர்

பட்டாசு வெடி விபத்து

நாமக்கல் அருகே உள்ள மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தில்லைக்குமார் (வயது 35). பட்டாசு வியாபாரி. பட்டாசு விற்பனை செய்ய அரசு அனுமதி பெற்றுள்ள இவர், மோகனூர் அருகில் உள்ள குமரிபாளையம் ஊராட்சி பகுதியில் பட்டாசு குடோன் வைத்து உள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. பட்டாசு மற்றும் சிலிண்டர்கள் வெடித்ததில் வீட்டில் இருந்த தில்லைக்குமார், அவரது தாயார் செல்வி (60), மனைவி பிரியங்கா (25) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. கூறியதாவது:- உரிய அனுமதி இல்லாமல் இந்த இடத்தில் பட்டாசு வைத்துள்ளனர். மேலும் பட்டாசுடன் அதிக சக்திவாய்ந்த நாட்டு வெடி வைத்துள்ளனர். ஏதோ ஒரு சூழ்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 60 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யப்படும்.

உரிய நடவடிக்கை

சேதமான வீடுகளின் இழப்பீடு குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். அறிக்கை வந்த பிறகு வனத்துறை அமைச்சர் மூலமாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால முகாம் ஏற்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி, பேரூராட்சி செயலாளர் செல்லவேல், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் கைலாசம், மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா மோகன் குமார், துணை தலைவர் சரவணகுமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் குமரவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story