இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை
வட்டக்கானலில் நிலவும் கடும்குளிர், மிதமான வெப்பத்தை அனுபவிக்க இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 24 மணி நேரமும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பகுதிக்கு, ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
இவர்கள், கொடைக்கானல் அருகே உள்ள வட்டக்கானல் பகுதியில் நிலவும் இதமான சூழ்நிலையை அனுபவிப்பதற்காக அங்கு அறைகளை எடுத்து தங்குகின்றனர்.
மேலும் வட்டக்கானலில் நிலவும் கடும் குளிரையும், பகல் நேரத்தில் மிதமான வெப்பத்தையும், மாலையில் பனியின் தாக்கத்தையும் இவர்கள் அனுபவிப்பதோடு சூரிய குளியலிலும் ஈடுபடுவார்கள்.
தீவிர வாகன சோதனை
கொரோனா பரவல் எதிரொலியாக, கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்த ஆண்டு கூடுதலாக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு, தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக, வட்டக்கானல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் வட்டக்கானல் பகுதியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொடைக்கானல் பகுதிக்கு நேற்று வரை இஸ்ரேல் நாட்டினர் 41 பேர் வந்துள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சாதாரண உடை அணிந்தும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர் என்றார்.