குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மோரணம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து மையத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமுதாய சுகாதார செவிலியர் ஹேமலதா, கலைவாணி, கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவர் வினோத்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில் பிறந்த 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒருமுறை பொது சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது. 6 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி அளவும், அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மி.லி அளவும் விட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.
ஒரு குழந்தைக்கு 5 வயது வரை வருடத்திற்கு இருமுறை என 10 முறை வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு தடுத்தல், வயிற்றுப்போக்கு, நிமோனியா, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் மாலைக்கண் நோய், கண்களில் கரும்புள்ளி ஏற்படாது. சரும நோய்கள், குடல் சம்பந்தமான உபாதைகள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.