ஆதரவாளர்களை சந்தித்த சசிகலா


ஆதரவாளர்களை சந்தித்த சசிகலா
x
திருப்பூர்


திருப்பூரில் ஆதரவாளர்களை சந்தித்த சசிகலா எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சசிகலா சுற்றுப்பயணம்

வி.கே.சசிகலா 2 நாள் சுற்றுப்பயணமாக திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு சென்ற அவர் அன்று இரவு திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் சசிகலா தங்கினார். நேற்று அதே ஓட்டலில் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

நேற்று மாலை திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வேனில் சென்ற அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு திரண்டிருந்த அவருடைய ஆதரவாளர்களை நோக்கி இரட்டை விரலை காட்டியும், கைகளை அசைத்தபடியும் அவர் இருந்தார். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

செல்பி எடுத்தனர்

அங்கு அவருக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அதன் நிறுவன தலைவர் உ.தனியரசு தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து அங்கிருந்து ஆதவாளர்கள் வேனில் புறப்பட்டு சென்ற சசிகலா, மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா முன்பு சாலையோரம் அவரைப் பார்ப்பதற்காக நின்றிருந்த பொதுமக்கள் அவரை பார்த்து கைகளை அசைத்தவுடன் வேனை நிறுத்தும்படி கூறினார். பின்னர் அங்கிருந்த பெண்கள், இளம்பெண்கள் சசிகலாவுடன் செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர்.

ஆதரவாளர்கள் ஊர்வலம்

மேலும் அங்கிருந்த குழந்தைகளுக்கு சசிகலா சாக்லெட் வழங்கினார். அங்கிருந்து புறப்பட்டு சென்ற சசிகலாவுக்கு அவினாசி ரோடு காந்திநகர், திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து அவர் அங்கிருந்து அவினாசிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை முதல் அவினாசி வரை சசிகலா சென்ற வேனுக்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்கள் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக அணிவகுத்து சென்றனர்.


Next Story