தொழிற்கல்வி பாடத்தை 6-ம் வகுப்பு முதலே கற்றுக்கொடுக்க வேண்டும்; பொதுமக்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்


தொழிற்கல்வி பாடத்தை 6-ம் வகுப்பு முதலே கற்றுக்கொடுக்க வேண்டும்; பொதுமக்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்
x

தொழிற்கல்வி பாடத்தை 6-ம் வகுப்பு முதலே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.

திருச்சி

மாநில கல்வி கொள்கை தொடர்பாக மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டம்:

தொழிற்கல்வி பாடத்தை 6-ம் வகுப்பு முதலே கற்றுக்கொடுக்க வேண்டும்

பொதுமக்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்

திருச்சி, அக்.16-

தொழிற்கல்வி பாடத்தை 6-ம் வகுப்பு முதலே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று மாநில கல்வி கொள்கை தொடர்பாக மண்டல அளவில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.

கருத்து கேட்பு கூட்டம்

தமிழகத்தில் மாநிலத்துக்கு என்று தனித்துவமாக மாநில கல்வி கொள்கை ஏற்படுத்துவதற்காக, தமிழக அரசு உத்தரவின்படி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு மாநில கல்வி கொள்கை தொடர்பாக மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது. அதன்படி, திருச்சி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.கூட்டத்துக்கு ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். மாநில உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களான பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர் நேசன், பேராசிரியர்கள் ராமானுஜம், சுல்தான் அகமது இஸ்மாயில், கல்வியாளர் அருணா ரத்னம், துளசிதாஸ், ‌ஆர்.பாலு, ஜெயஸ்ரீ, மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெற்றோர், மாணவர்கள்

கூட்டத்தில் முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.இதில் பெரும்பாலானோர், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தொழிற்கல்வியை மாணவர்களுக்கு 6-ம் வகுப்பு முதலே அளிக்க வேண்டும். மனப்பாட முறையை ஒழித்து, கற்றல், கற்பித்தல் முறையை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கம், நன்னடத்தை போன்றவை தொடர்பான விழிப்புணர்வு, பாடத்திட்டங்கள், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டாக்டர்களை போல் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்றனர்.

தாய்மொழி கல்வி கட்டாயம்

குறிப்பாக, விவசாய படத்தையும், அது சார்ந்த தொழில்நுட்பங்களையும் இளம்பருவத்திலேயே அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் தாய்மொழி கல்வியை 5-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயம் வழங்க வேண்டும். அதன்பின், 3-வது மொழியாக மற்ற மொழிகளை விருப்ப மொழியாக கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.மேலும், 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இருப்பதால் மாணவர்கள் பலர் மேல்நிலை வகுப்புகளில் படிக்க, எழுத சிரமப்படுகிறார்கள். எனவே, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களின் கல்வித் தகுதியை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். உடற்கல்வியை கட்டாயமாக அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.கூட்டத்துக்குப்பின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசிடம் அறிக்கை தாக்கல்

தனித்துவமான மாநில கல்வி கொள்கை உருவாக்க இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, திருச்சியோடு சேர்த்து இதுவரை 4 மண்டலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மாநில கல்வி கொள்கை தொடர்பாக பொதுமக்கள்தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை stateeducationpolicy@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.இம்மாதம் கடைசி வாரத்தில் கோவை, சேலம் மண்டலங்களிலும், நவம்பர் முதல் வாரத்தில் வேலூர் மற்றும் சென்னை மண்டலங்களிலும் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களும் திருப்திகரமாக நடந்துள்ளது. இவற்றில் அதிகமாக அரசுப்பள்ளிகள், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் ஒழுக்க மேம்பாடு, ஆசிரியர், மாணவர்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து கருத்துக்கள் வந்துள்ளன. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். நாங்கள் அறிக்கை தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு முன்னதாக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story