பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற தன்னார்வலர்கள் ஆர்வம் : கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்
பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி பெற வேண்டிய ஆர்வத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக தேனி கலெக்டர் அலுவலகத்தில் தன்னார்வலர்கள் குவிந்தனர்
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாம் ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் கல்லூரி வளாகத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது. பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் 12 நாட்களும் பயிற்சி முகாமில் தங்கி பயிற்சி பெற வேண்டும்.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை சமர்ப்பித்து பெயர் பதிவு செய்தனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக மாதிரிகள் சேகரித்தனர்.
பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இல்லாத நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது தன்னார்வலர்களுக்கு பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு பயிற்சி பெறும் தன்னார்வலர்கள், பேரிடர் மீட்பு பணிகளின் போது தீயணைப்பு துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளுக்கு உதவியாக செயல்படுவார்கள்.