சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
வெறையூர் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்துணவு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வெறையூர் அருகே தண்டரை கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறிது தூரதில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமைத்து கொண்டு சென்று வழங்குவது வழக்கம். அதன்படி இன்று மதிய உணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களில் ஒருவர் உணவில் பல்லி ஒன்று கிடப்பதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
வாந்தி-மயக்கம்
அதற்குள் உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து 50 மாணவ-மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெற்றோர்கள் முற்றுகை
மேலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெற்றோர்கள் கூறுகையில், சத்துணவு அமைப்பாளர் சியாமளா (வயது 45), உதவியாளர் மஞ்சுளா (42) ஆகிய இருவரும் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு உணவுகள் வழங்குவது கிடையாது.
இதனால் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து வெறையூர் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.