குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம்


குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:45 PM GMT)

விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 45). இவர் குடிசை தொழிலாக வீட்டிலேயே குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை முட்டத்தூர் கிராமத்தில் இவர் தனது மொபட்டில் சென்று குல்பி ஐஸ் விற்பனையில் ஈடுபட்டார்.

குல்பி ஐசை கண்டதும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதை வாங்கி விரும்பி சாப்பிட்டனர். இரவு 8 மணிக்கு மேல் குல்பி ஐஸ் சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

94 பேருக்கு சிகிச்சை

அந்த வகையில் 52 சிறுவர்கள் உள்பட 94 பேர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் 94 பேர் அனுமதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியே பரபரப்பாக காணப்பட்டது.

இது பற்றி அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பின்னர் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.

கண்காணிக்க கலெக்டர் உத்தரவு

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

குல்பி ஐஸ் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட 94 பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக குல்பி ஐஸ் தயாரித்த கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளனர். இது போன்று மாவட்டத்தில் உரிய உரிமம் இல்லாமல் குழந்தைகள் சாப்பிடும் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

அப்போது விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர்கள் அறிவழகன், புகழேந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், செல்வம், துணைத்தலைவர் கில்பர்ட் ராஜ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.

குல்பி வியாபாரி கைது

இதனிடையே இந்த சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசார் 273, 328(காலாவதியான, மயக்கம் தரக்கூடிய உணவு பொருட்களை விற்பனை செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குல்பி ஐஸ் வியாபாரியான கண்ணனை கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையிலான குழுவினர் குல்பி ஐஸ் வியாபாரி கண்ணனின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.

இது பற்றி டாக்டர் சுகந்தன் கூறுகையில், கண்ணன் கடந்த 6 மாதமாக வீட்டிலேயே குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். 2 லிட்டர் பால், ஒரு கிலோ மைதா மாவு, ஒரு கிலோ சர்க்கரையில் தினமும் 70 முதல் 100 குல்பி ஐஸ் தயாரித்து மொபட்டில் பக்கத்து கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். இதை வாங்கி சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குல்பி ஐஸ் மாதிரியை சேகரித்து விழுப்புரம் தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தோம். அந்த ஆய்வில், குல்பியில் நஞ்சுப்பொருள்(விஷம்) எதுவும் இல்லை என்று தெரிந்துள்ளது. மற்றொரு குல்பி ஐஸ் மாதிரியை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள நுண்ணுயிர் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த ஆய்வு அறிக்கை கிடைக்க 2 நாள் ஆகும். கண்ணன், மைதா மாவை சரியாக காய்ச்சாமல் குல்பி ஐஸ் தயாரித்துள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.


Next Story