வாக்காளர் அடையாள அட்டை புதிய முறையில் தயாராகிறது


வாக்காளர் அடையாள அட்டை புதிய முறையில் தயாராகிறது
x

வாக்காளர் அடையாள அட்டை புதிய முறையில் தயாராகிறது. வாக்காளர்களுக்கு அடுத்த மாதம் (ஜனவரி) வினியோகிக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை

புதிய அட்டை

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர்களாக தகுதியை கொண்ட 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்து சேரலாம். அந்த வகையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. இதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர் பெயர், முகவரி விவரம் அடங்கியிருக்கும்.

இந்த நிலையில் தற்போது புதியதாக ஸ்மார்ட் கார்டு வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- வாக்காளர் அடையாள அட்டை முற்றிலும் மாற்றி புதிய தொழில்நுட்ப வடிவமைப்பில் புதிதாக அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏ.டி.எம்.கார்டுகளில் உள்ளதை போல் சிறிய 'சிப்' வைக்கப்பட உள்ளது. ஸ்கேன் செய்யும் அடிப்படையில் இந்த அடையாள அட்டை இருக்கும். தற்போது உள்ள அளவை விட சற்று சிறியதாக இருக்கும். இதன் மாடல் இன்னும் வெளியிடப்படவில்லை.

தபாலில் வினியோகம்

மராட்டிய மாநிலத்தில் இந்த புதிய அடையாள அட்டை அச்சடிக்கும் பணி நடைபெறுகிறது. நாடு முழுவதும் அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த புதிய அடையாள அட்டை தபால் துறை மூலம் வினியோகிக்கப்பட உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்தல் பிரிவு அலுவலகம் மூலம் தபாலில் வாக்காளர்களுக்கு வீட்டின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். இன்னும் 20 நாட்களில் பணி நிறைவடையும் என கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த மாதம் (ஜனவரி) முதல் இந்த புதிய அட்டை வினியோகிக்கப்படும். வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்:-

ஆண்கள்-6,61,124.

பெண்கள்-6,78,887.

திருநங்கைகள்-65.

மொத்தம்-13,40,076.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு முறை சுருக்க திருத்த பணியில் விண்ணப்பித்தவர்கள் விவரம்:-

புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள்-25,777.

பெயர் நீக்க விண்ணப்பித்தவர்கள்-23,180.

திருத்தத்திற்கு விண்ணப்பித்தவர்கள்-8,269.


Next Story