வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்


வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
x

வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.

பெரம்பலூர்

எதிர்வரும் தேர்தலை புறக்கணித்து...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு மக்களுக்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி வறண்ட வெள்ளாறு படுகையில் வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பணிகளை தொடர்ந்ததால், அதனை கண்டிக்கும் விதமாகவும், எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்கும் விதமாகவும் வாக்காளர் அடையாள அட்டையை லெப்பைக்குடிகாடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நீர் ஆதார பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று அந்த அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களில் சிலரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் லெப்பைக்குடிகாடு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை லெப்பைக்குடிகாடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றனர். அப்போது அங்கு வருவாய் ஆய்வாளர் இல்லாததால் அவர்கள் மீண்டும் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் லெப்பைக்குடிகாடு பாலத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் தாசில்தார் அனிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story