வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் - தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் விண்ணப்பம்


வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் - தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் விண்ணப்பம்
x

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

சென்னை,

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதோடு 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயர்களை சேர்க்கவும், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து திருத்த நடவடிக்கை மேற்கொள்ள அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த சனி, ஞாயிறு இரு நாட்களும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை கொடுத்தனர். 7 லட்சத்து 10 ஆயிரத்து 274 பேர் முதல் கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 19 பேர் புதிதாக தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 44,398 பேர் மனு கொடுத்துள்ளனர். அடுத்ததாக சேலம் மாவட்டம் 41,301, திருவள்ளூர் மாவட்டம் 39,320 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது தொடர்பாக 77,698 விண்ணப்பங்களும், திருத்தம் செய்வது தொடர்பாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 614 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் பணிகள் நடந்தன. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் சென்னையில் 23,519 பேர் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

1 More update

Next Story