வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,513 ஆக உயர்வு


வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,513 ஆக உயர்வு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 513 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு தொகுதியில் 1 வாக்குச்சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

திருப்பூர் மாவட்ட சுருக்கமுறை திருத்தம் 2023 வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 1-1-2023-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த 4-ந்தேதி முதல் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூடுதலாக 1 வாக்குச்சாவடி

மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான உத்தேசிக்கப்பட்டு, அதற்கான வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகளும், காங்கயத்தில் 295, அவினாசியில் 313, திருப்பூர் வடக்கு தொகுதியில் 373, திருப்பூர் தெற்கு தொகுதியில் 242, பல்லடத்தில் 410, உடுமலையில் 294, மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 512 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளன.

1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் அடிப்படையில் திருப்பூர் வடக்கு தொகுதியில் பெரியார் காலனி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி 2ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் 1 வாக்குச்சாவடி கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடியின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 513 ஆக உயர்ந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் பிரிவு ஏற்படுத்தல், கட்டிட மாற்றம், வேறு இடம் மாற்றம் ஆகிய பிரிவில் 26 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

ஆட்சேபனை தெரிவிக்கலாம்

இதுதொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து வருகிற 6-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். வருகிற 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஏதாவது ஒருநாளில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் கூட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் ஆட்சேபனை மனுக்கள் குறித்து பரிசீலித்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி செய்யப்பட்ட பின்னர் கலெக்டர் தலைமையில் மீண்டும் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story