விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செடல் திருவிழா
விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சந்தைதோப்பில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான உற்சவ பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவில் கடந்த 19-ந்தேதி மயானக்கொள்ளை திருவிழாவும், 20-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
செடல் திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் பலர் 60 அடி அலகுகள், செடல் போட்டுக் கொண்டும், விமான அலகு போட்டுக் கொண்டும் தீச்சட்டி முளைப்பாரி எடுத்துக் கொண்டும் விருத்தாசலம் சன்னதி வீதி, பாலக்கரை, கடலூர் சாலை வழியாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை சந்தன நிராமணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.