வி.ஆர்.எஸ். நிதி நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் வி.ஆர்.எஸ். நிதி நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாைல மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியில் வி.ஆர்.எஸ். நிதி நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாைல மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவனம்
செய்யாறு பகுதியை சேர்ந்த சம்சுமொய்தீன் என்பவர் வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளில் வி.ஆர்.எஸ். என்ற தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் தங்கம், வெள்ளி பொருட்கள், திருமண சீர்வரிசை சாமான்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி வந்தவாசி, தெள்ளார், கீழ்கொடுங்காலூர், செய்யாறு, காஞ்சீபுரம், உத்தரமேரூர், செய்யூர், செங்கல்பட்டு, வேலூர், ஆரணி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பேரிடம் ஏஜெண்டு மூலமாக பல கோடிக்கு மேல் பணம் வசூல் செய்தார்.
பின்னர் அவர் பொதுமக்களுக்கு பணம் தராமல் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சு மொய்தீனை கைது செய்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பணம் மீட்டு தரப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் வி.ஆர்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் பறி கொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கையில் திருவோடு ஏந்தியும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுது புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணத்தை மீட்க பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன், வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






