விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
முறையாக டெண்டர் விட வலியுறுத்தி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஒன்றியத்துக்குட்பட்ட ராஜேந்திரபட்டினம், சின்ன கண்டியாங்குப்பம், சின்னப்பரூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்கு அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகளுக்காக சுமார் ரூ.2 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை செய்வதற்காக விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று ஊராட்சி பணிகளுக்காக, டெண்டர் விடப்பட இருந்த நிலையில், டெண்டர் எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் ஒப்பந்ததாரர்கள், படிவக் கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகையை கட்ட வந்த போது தி.மு.க.வினர் அதனை தடுப்பதாக புகார் எழுந்தது. இதனால் அ.தி.மு.க. மற்றும் இதர கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமையில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணியை சந்தித்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் டெண்டர் கோருவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது, டெண்டரை முறையாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.