தேனிக்கு கொண்டு வரப்பட்ட 'விவிபேட்', கட்டுப்பாட்டு கருவிகள்
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து தேனிக்கு ‘விவிபேட்’ மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல்
அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களை போதிய அளவில் இருப்பு வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்துவதற்காக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவுக்கு தேவையான எந்திரங்களை தேனிக்கு எடுத்து வர முடிவு செய்யப்பட்டது.இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 180 கட்டுப்பாட்டு கருவிகள், நெல்லை மாவட்டத்தில் இருந்து 490 வாக்குப்பதிவை சரிபார்க்கும் (விவிபேட்) கருவிகள் ஒரு கன்டெய்னர் லாரியில் ஏற்றி தேனிக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று காலை இந்த லாரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பு அறைக்கு வந்தது.
சரிபார்ப்பு
பின்னர் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அந்த கன்டெய்னர் லாரிக்கு வைக்கப்பட்டு இருந்த 'சீல்' ஆகியவை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. லாரியில் இருந்த கருவிகள் அனைத்தும் இறக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு கருவி உள்ள பெட்டியின் விவரங்களை ஸ்கேன் செய்து சரிபார்க்கப்பட்டது.
ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தற்போது கொண்டு வரப்பட்ட கருவிகள் அனைத்தும் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் பெல் நிறுவன ஊழியர்களால் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, தேர்தல் பிரிவு தாசில்தார் சுகந்தா மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.