மாமல்லபுரத்தில் 'ஜி-20' மகளிர் உச்சி மாநாடு தொடங்கியது


மாமல்லபுரத்தில் ஜி-20 மகளிர் உச்சி மாநாடு தொடங்கியது
x

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ‘ஜி-20’ மகளிர் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. தமிழக பெண் தொழில்முனைவோர் பங்கேற்கும் கண்காட்சி இன்று தொடங்குகிறது.

செங்கல்பட்டு

உச்சி மாநாடு

'ஜி-20' மகளிர் உச்சி மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் கருப்பொருள் 'மகளிர் தலைமையிலான வளர்ச்சிமாற்றம், செழிப்பு மற்றும் முன்னேற்றம்' என்பதாகும். இந்த உச்சி மாநாட்டில் கண்காட்சியும், மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும், 8 அமர்வுகளும், 1 உள்ளறை கூட்டமும் இடம் பெறும்.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் ஆதரவுடன் தமிழகத்தை சேர்ந்த அடிமட்டத்திலான தொழில் முனைவோர் கண்காட்சியும் இந்த உச்சி மாநாட்டில் இடம் பெறுகிறது. மகளிர் தொழில் முனைவோர் தங்களது திறமைகள், படைப்பாற்றல் திறன், புத்தாக்கம் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் தளமாக இந்த கண்காட்சி இருக்கும். அர்ஜென்டினா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த மகளிர் 'ஜி-20' பிரதிநிதிகளின் காட்சிப்படுத்துதலும் இதில் இடம்பெறும். இந்த கண்காட்சி 15-ந்தேதி (இன்று) தொடங்கி வைக்கப்படும்.

இரவு விருந்து

'ஜி-20' தலைவர்கள் பிரகடனத்தில் இடம் பெறக்கூடிய நடவடிக்கை எடுக்கத்தக்க பரிந்துரைகளை கொண்ட மகளிர் 20 அறிவிக்கை 2023 தொடக்க அமர்வில் வெளியிடப்படும். மகளிர் 20 பிரதிநிதிகள் மற்றும் அறிவுசார் பங்குதாரர்கள் எழுதிய மகளிர் தலைமையிலான வளர்ச்சி குறித்த பல்வேறு கட்டுரைகளும் இதில் வெளியிடப்படும்.

மகளிர் சுகாதாரம், பாலின சமத்துவம், சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான பிரிவு, மகளிர் தலைமையிலான பருவநிலை நடவடிக்கை, பாலின டிஜிட்டல் பிரிவை நிரப்புதல் ஆகிய தலைப்புகளில் இன்று 3 முழு அமர்வுகள் நடத்தப்படும். முதல் அமர்வின் முடிவில் மகளிர் 20 முதலாவது பதிலளிப்போர் கட்டமைப்பு வெளியிடப்படும். நிறைவில், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் உயரிய கலாசார பாரம்பரியத்தை பறைச்சாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும், இரவு விருந்தும் நடைபெறும்.

சுற்றுலா மூலம் மகளிர் 'ஜி-20'

தடைகளை உடைத்தல், வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மூலம் அதிகாரமளித்தல், பொருளாதாரத்துக்கான கட்டமைப்பு மற்றும் சேவைகளில் முதலீடு செய்தல் ஆகிய கருப்பொருள்களில் 3 அமர்வுகள் நாளை நடைபெறும். மகளிர் அதிகாரமளித்தல் ஆற்றலை கொண்டாடுதல் என்பது குறித்த கூட்டம் கடைசியாக நடைபெறும். இந்த நிறைவு அமர்வில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பா.ஜ.க.வின் தேசிய செய்தித்தொடர்பாளருமான பாரதி கோஷ் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்துவார்.

2015 துருக்கி மகளிர் 'ஜி-20'-ன் தலைவர் குல்தன் துர்க்தன், 2021 இத்தாலி மகளிர் 'ஜி-20'-ன் தலைவர் லிண்டா லாரா சப்பதினி, 2022 இந்தோனேசியா மகளிர் 'ஜி-20'-ன் தலைவர் உலி சிலாலாஹி, 2023 மகளிர் 'ஜி-20'-ன் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா ஆகியோர் உரையாற்றுவார்கள். சுற்றுலா மூலம் மகளிர் 'ஜி-20' பிரதிநிதிகள் நிகழ்வினை நாளை மறுதினம் தமிழக அரசு ஒருங்கிணைத்துள்ளது.


Next Story