52 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்:முதல்ேபாக பாசனத்திற்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்


52 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்:முதல்ேபாக பாசனத்திற்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:46 PM GMT)

வைகை அணை நீர்மட்டம் 52 அடியாக குறைந்ததால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேனி

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தது. இதனால் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக ஜூன் 2-ந்தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணையில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதன்காரணமாக நீர்மட்டம் உயரவே இல்லை.

முதல்போக பாசனம்

இதனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்து வைகை அணை நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தே முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 52.62 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 55 அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 72 கன அடியாகவும் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக வைகை அணையில் இருந்து முதல்போகம், 2-ம் போகம், ஒருபோகம் மற்றும் 58-ம் கால்வாய், 5 மாவட்ட குடிநீர் தேவைக்கு என அனைத்திற்கும் தவறாமல் தண்ணீர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story