அனைத்து துறை சார்பில் காத்திருப்பு போராட்டம்
அனைத்து துறை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309-ன்படி சி.பி.எஸ். என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், இந்த திட்டத்தில் இறந்த, ஓய்வு பெற்ற, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் வரவேற்றார். இதில், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி செல்லப்பா, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தர், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் ஆகியோர் பேசினர். முடிவில், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சீனி முகம்மது நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மேளம் அடித்தும், பாட்டுபாடியும் கோரிக்கையை வலியுறுத்தினர்.
அதேபோல் திருவாடானையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி நேற்று அலுவலர்கள் பணிக்கு வராததால் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.