துணைத்தலைவர் உள்பட 9 கவுன்சிலர்கள் வெளிநடப்பு


துணைத்தலைவர் உள்பட 9 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:46 PM GMT)

நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து துணைத்தலைவர் உள்பட 9 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து துணைத்தலைவர் உள்பட 9 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன், தி.மு.க., தே.மு.தி.க., சுயேட்சை கவுன்சிலர்கள் குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள நிதியை பாரபட்சமின்றி அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை.

தர்ணா

இதனால் ஆத்திரமடைந்த துணைத்தலைவர் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட 9 கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உங்களது கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story