நீலகிரி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாக்கத்தான்-2023 விழிப்புணர்வு நிகழ்ச்சி-8-ந் தேதி நடக்கிறது


நீலகிரி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாக்கத்தான்-2023 விழிப்புணர்வு நிகழ்ச்சி-8-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:01 PM GMT)

நீலகிரி சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊட்டியில் வாக்கத்தான்-2023 என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊட்டியில் வாக்கத்தான்-2023 என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

வாக்கத்தான்- 2023

நீலகிரி மாவட்டம் ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளது.

இந்த நிலையில் நீலகிரியின் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "வாக்கத்தான்-2023" என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி வருகிற 8-ந் தேதி காலை 8 மணி அளவில் ஊட்டியில் நடக்க உள்ளது.

இந்தப் பேரணியானது வென்லாக் டவுன், பிங்கர் போஸ்ட், தமிழகம் சாலை, கில் பங்க், ஸ்டீபன் தேவாலயம், சேரிங் கிளாஸ் வழியாக எச்.ஏ.டி.பி. மைதானத்தை அடையும்.

இந்த பேரணியில் சமூக ஆர்வலர்கள்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வணிகச் சங்கங்களின் பிரதிநிதிகள், ஓட்டல் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசுகையில், நீலகிரியின் சுற்றுச்சூழலை மற்றும் பல்லுயிர் கோளத்தைப் பேணி பாதுகாக்க அனைவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்த மாபெரும் பேரணியின் நோக்கமாகும்.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இதில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களின் விவரங்களை பதிவு செய்யும்பட்சத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அந்த ஒப்புகைச் சீட்டினைப் பேரணி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து பேரணியில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்களது பங்கேற்பினைப் பாராட்டி இ-மெயில் முகவரிக்கு பங்கேற்பு சான்றிதழ் அனுப்பப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story