கட்டப்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலைய தடுப்பு சுவர்


கட்டப்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலைய தடுப்பு சுவர்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய தடுப்பு சுவர் பலத்த மழையால் இடிந்து விழுந்து ஓராண்டாகியும் இதுவரை கட்டப்படாமல் உள்ளது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய தடுப்பு சுவர் பலத்த மழையால் இடிந்து விழுந்து ஓராண்டாகியும் இதுவரை கட்டப்படாமல் உள்ளது.

சாய்ந்து விழுந்த தடுப்பு சுவர்

காரைக்குடி அருகே உள்ளது அமராவதிபுதூர் கிராமம். இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இதுதவிர இதை சுற்றி நூற்றுக்கணக்கான குக்கிராமங்களும் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு ஏற்படும் அவசார கால முதல் உதவி சிகிச்சைக்காக இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர் மற்றும் உதவியாளர் உள்ளனர். விஷ பூச்சிகள் கடி, விபத்து உள்ளிட்டவைகள் ஏற்பட்டால் முதலில் இந்த சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்ற பின்னர் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு சுவர் இருந்து வந்தது. ஆனால் இது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கடந்த ஓராண்டிற்கு முன்பு இந்த பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த சுவர் தாக்கு பிடிக்காமல் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் தடுப்பு இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது.

கிராம மக்கள் கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சோபன்பாபு கூறியதாவது:- அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்று சுவர் கடந்த ஆண்டு இடிந்து விட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த சுவர் கட்டப்படவில்லை. சுகாதார நிலையம் திறந்த நிலையில் இருப்பதால் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து மது குடிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாரியப்பன் என்பவர் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஓராண்டாகியும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார நிலையத்திற்குள் விஷ பூச்சிகள் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக இங்கு வரும் நோயாளிகள் அச்சப்படுகின்றனர். அதே போல சமூக விரோதிகளின் அட்டகாசமும் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இடிந்து விழுந்த இந்த தடுப்பு சுவரை அகற்றி விட்டு புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story