கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
திருப்பூர் இ்டுவம்பாளையம் பகுதியில் கோர்ட்டு உத்தரவுப்படி வீடு ஜப்தி செய்யப்பட்டதால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு
திருப்பூர் வீரபாண்டி அருகே இடுவம்பாளையம் பகுதியில் தோட்டத்துச் சாளையில் வீடு கட்டி வசித்து வருபவர் எஸ்.எம்.ராஜு (வயது 49). இவர் வசித்து வரும் வீடு வேறு நபருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாக கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில், அந்த இடத்தை சுவாதீனப்படுத்தி ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து கோர்ட்டு அமீனா அமல்ராஜ் தலைமையிலான கோர்ட்டு ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ராஜு வசித்து வரும் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது மனைவி மாலதி மற்றும் குழந்தைகள் தனியாக இருந்த நிலையில், கோர்ட்டு ஊழியர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜூ ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டம்
வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பொருட்களை எங்கே எடுத்துச்செல்வது என்று தெரியாமல் அங்கேயே கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அதிகாலை அந்த இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக மீண்டும் அதிகாரிகள் வந்தனர். அப்போது கம்பி வேலி அமைக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி
அப்போது திடீரென ராஜுவின் மனைவி மாலதி அந்த தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.